நிதி நிலை அறிக்கை தடைகளை தாண்டி சாதனை படைக்கும் - முத்தரசன்


நிதி நிலை அறிக்கை தடைகளை தாண்டி சாதனை படைக்கும் - முத்தரசன்
x

கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம், பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப்படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, (19.02.2004) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். தமிழ் சமூகத்தின் தொன்மை நல் மரபுகளை முன்னெடுத்து வளர்த்தெடுக்க நிதி நிலை அறிக்கை கவனம் செலுத்தி இருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் பெயர்த்து வழங்கவும் தொல்லியல் ஆய்வுகளை மேலும் ஆறு மையங்களுக்கு விரிவுபடுத்தியிருப்பதும், கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப்படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது.

குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உட்பட காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளையும் புனரமைக்கும் திட்டமும், 2 ஆயிரம் மேல்நிலைத் தொட்டி கட்டும் திட்டமும் முக்கியமானது. இடை பாலினத்தவர்களுக்கு கல்வி, விடுதி இலவசமாக வழங்குவதும், கல்லூரி கல்வி செலவை அரசே ஏற்பதும் அவர்களின் சமூக ஒப்புதலுக்கு வழிவகுக்கும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 720 கோடியும் மாணவர்கள் கல்விக் கடன் வழங்குவதும் உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ் புதல்வன் திட்டமும் வரவேற்கத்தக்கது.

ஒன்றிய அரசு கட்டமைப்பில் தமிழர் பங்கேற்பு அதிகரிக்க சிறப்பு பயிற்சி மையங்கள் அமைப்பது குறிப்பிடத்தக்கது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் அளிப்பது வரவேற்பு பெறும். இதில் 500 பேர் பணியமர்வு என்ற வரம்பை தளர்த்தி, குறைப்பது அவசியமாகும். பள்ளிக் கல்வித்துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

பொதுப் போக்குவரத்துப் பயணிகள் வசதிக்காக மூன்றாயிரம் புதிய பேருந்துகள் வாங்க கவனம் செலுத்தியுள்ள நிதிநிலை அறிக்கை, போக்குவரத்துத் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாத்து, அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்கவும் முன் வரும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. சென்னை பெருநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் முறையில் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் செய்வது பொருத்தமானது. தீவிரமாக நகர்மயமாகி வரும் நிலையில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு மேலும் கூடுதலாக நிதித் தேவை உருவாகும். குடிசைகள் இல்லா தமிழ்நாடு முத்தமிழறிஞர் கலைஞரின் நீண்ட காலக் கனவாகும். அதனை நனவாக்கும் முயற்சியில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியதால் பெரும் சவாலை சந்தித்த போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்து விட்ட பாஜக ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனைகளை விதித்து நிதித் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.

வரும் ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என உறுதியளித்துள்ள நிதிநிலை அறிக்கை அரசுத்துறைகளிலும், நிறுவனங்களிலும் பத்தாண்டுகளுக்கும் மேலான ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஆசிரியர், அரசுப் பணியாளர் பழைய ஓய்வூதியம் போன்றவை இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே நீடிக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story