கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
கீழக்கரை நகராட்சி பகுதியில் கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஊழியர்கள் நோட்டீசு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சி பகுதியில் கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஊழியர்கள் நோட்டீசு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கட்டிட இடிபாடு
கீழக்கரை நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என் குப்பை, எனது பொறுப்பு, நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது எனது பொறுப்பு என்ற தலைப்பில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், நகராட்சி ஊழியர்கள் கீழக்கரை பஸ் நிலையத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் கட்டிட இடிபாடு கழிவுகளை வீதியில் போடுவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டிட இடிபாடு கழிவுகளை கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்தக் காரர்கள் சாலைகளிலோ தெருக்களிலோ போடக்கூடாது. மீறும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இடிபாடு கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அகற்றி நகராட்சி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய உரக்கிடங்கு பள்ள மோர்குளம் என்ற இடத்தில் கொட்டி கொள்ளலாம். மேலும் நகராட்சியில் ரூ.750 செலுத்தினால் டிராக்டர் மூலம் நகராட்சி வாகனத்தில் கட்டிட இடிபாடு கழிவுகள் அகற்றப்படும் என்று நோட்டீஸ் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது.
எந்திரம் மூலம் அகற்றம்
மேலும் கீழக்கரை சாலைகளில் கொட்டப்பட்ட கட்டிட இடிபாடு கழிவுகளை எந்திரம் மூலம் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அப்போது நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், கவுன்சிலர் பயாஸ்தீன், மீரான் அலி, தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் நயீம் மற்றும் தி.மு.க., நகர் முன்னாள் துணை செயலாளர் கென்னடி, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மேற்பார்வையாளர் சக்தி உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.