தமிழில் பெயர்பலகை வைக்காத 42 கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம்
கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர்பலகை வைக்காத 42 கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணைப்படி, கடலூர் மாவட்ட ஆய்வு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களின் பெயர்பலகைகள் தமிழில் அமைக்கப்பட்டு உள்ளதா? என்றும், கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அமர்வதற்கு ஏதுவாக இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா? என்றும் கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன் ஆய்வு செய்தார்.
அப்போது, 42 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகை வைக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 42 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். மேலும் 16 நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி அமைத்து கொடுக்காமல் இருந்தது கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விழிப்புணர்வு
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள் 1948-ன்படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களின் பெயர்பலகை 5:3:2 என்ற விகிதத்தில், தமிழ் எழுத்துக்கள் முதலில் வருமாறும், ஆங்கிலம் மற்றும் இதர மொழி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கு கீழ் வருமாறும் அமைக்க வேண்டும்.
ஆகவே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பெயர்ப்பலகை அமைக்கும் போது, பெயர்பலகைகளில் தமிழ் முதன்மை மொழியாகவும், ஆங்கிலம் உள்பட பிற மொழிகள் அவரவர் விருப்பத்திற் கேற்ப அடுத்தடுத்து அமைக்க வேண்டும் என்றும், பிற மொழி எழுத்துகளை விட தமிழ் எழுத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று கடைகள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.