அரூரில்போலீஸ்காரரை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்கு
அரூர்:
அரூரில் போலீஸ்காரரை தாக்கிய ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர்
தர்மபுரி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பிஸ்மி அல்பேரிஸ். இவர் மாற்று பணியில் அரூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக தற்போது பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அரூரில் இருந்து புறப்பட்டார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்றதாக தெரிகிறது. இதனால் சுதாரித்து கொண்ட பிஸ்மி அல்பேரிஸ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் இதுபற்றி மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் கேட்டார்.
வழக்கு
அப்போது பிஸ்மி அல்பேரிசை தரக்குறைவாக பேசிய அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவருடைய நெற்றியில் கையால் தாக்கினாராம். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். இதில் காயமடைந்த பிஸ்மி அல்பேரிஸ் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் இதுதொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போலீஸ்காரரை தரக்குறைவாக பேசி தாக்கியவர் பொய்யப்பட்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (வயது 29) என்பது தெரியவந்தது. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரிந்தது. இதுதொடர்பாக காளிதாஸ் மீது அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.