நத்தக்காடையூர் அருகே பயங்கர தீ விபத்தில் 40 தென்னை, 60 பனை மரங்கள் எரிந்து சேதம்


நத்தக்காடையூர் அருகே  பயங்கர தீ விபத்தில் 40 தென்னை, 60 பனை மரங்கள் எரிந்து சேதம்
x

நத்தக்காடையூர் அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 தென்னை, 60 பனை மரங்கள் எரிந்து சேதமானது.

திருப்பூர்

நத்தக்காடையூர் அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 தென்னை, 60 பனை மரங்கள் எரிந்து சேதமானது.

தென்னை, பனைமரங்களில் தீ

திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மேட்டுக்காட்டுவலசில் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் இருபுறமும் ஏராளமான முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இந்த நிலையில் மேட்டுக்காட்டுவலசு ஓடையில் வலதுபுற மேல்பகுதியில் வளர்ந்துள்ள முட்புதர்களில் ஒரு பகுதியில் நேற்று மதியம் தீ பிடித்து எரியத்தொடங்கியது. பலத்த காற்று வீசியதால் தீ மளமள என வேகமாக பரவி எரியத்தொடங்கியது.

மேலும் இந்த தீ கரையின் இரு புறமும் பரவி சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நீண்டு பற்றி எரியத்தொடங்கியது. இந்த தீ கரையின் இடதுபுறம் பகுதியில் சுமார் 40 தென்னை மரங்களில் பற்றி எரிந்தது. மேலும் இந்த தீ ஓடையின் இருபுறமும் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட பனை மரங்களிலும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீயணைப்பு வீரர்கள்

இதுபற்றி தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பிரபாகரன், வேலுச்சாமி (போக்குவரத்து) தலைமையிலான சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த தென்னை, பனை மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் தீயை அணைப்பதற்கு அருகில் இருந்த தனியார் டிராக்டர், லாரி மூலம் ஏராளமான தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்தது.

4½ மணிநேரம் தீ

இந்த தீயைஅணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4½ மணிநேரம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போராடி தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் மைலாடி துரைசாமி என்பவருக்கு சொந்தமான சுமார் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதி எரிந்தும், முற்றிலும் எரிந்தும் சேதமடைந்தன.

மேலும் தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களும், முட்புதர்களும் எரிந்து சாம்பலானது. இதுபற்றி காங்கயம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் எரிந்த தென்னை, பனை மரங்களின் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story