காட்டு தீயினால் ஏற்படும் பாதிப்புகள்


காட்டு தீயினால் ஏற்படும் பாதிப்புகள்
x
திருப்பூர்


உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு கூட்டங்கள்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.

இங்கு யானை, சிறுத்தை, புலி, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் அரிய வகை தாவரங்களும் வளர்ந்து வருகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் கருகத்தொடங்கி உள்ளது. இதனால் திருப்பூர் வனக்கோட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும் காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

காட்டு தீயினால் பாதிப்புகள்

அதைத் தொடர்ந்து நேற்று மாவட்ட வன அலுவலகத்தில் அனைத்து செட்டில்மென்ட்டை சேர்ந்த மூப்பர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் கலந்து கொண்டு பேசியதாவது:-

வனம் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கியமானது காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கும். காட்டுத்தீ ஏற்படுவதால் சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகளில் உள்ள இயற்கை நீரூற்றுகள் பாதிப்படைந்து அடைபடுகின்றன.இதன் காரணமாக ஓடைகள், சிற்றோடைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.

மக்களுக்கு நோய்கள்

மேலும் சோலைக்காடுகள், புல்மலைகள் காட்டுத்தீயினால் பாதிப்பு ஏற்படுவதால் பெய்கின்ற மழைநீர் சேமித்து வைக்க இடமில்லாததால் விரைவில் சென்று கடலில் கலந்து விடுகிறது. மேலும் காட்டுத்தீயினால் மர இலைகள் சேமித்து வைத்துள்ள கார்பன்டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து மக்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகிறது.

காட்டுத்தீயினால் புழு, பூச்சிகள் உள்பட பல்வேறு வன உயிரினங்கள் பாதிப்படைந்து அவ்விடத்தில் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிப்படைகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதியகத்தைச் சேர்ந்த ரவிக்குமார், முல்லை உள்ளிட்ட வனத்துறை பணியாளர்கள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story