ஓமலூர் அருகே 20 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதம்


ஓமலூர் அருகே 20 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதம்
x

ஓமலூர் அருகே 20 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அருகே 20 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பலத்த காற்று

ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி கெண்டபிரியான் வளவு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் தனது தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரும்பை முழுவதும் அறுவடை செய்தவுடன் தோட்டத்தில் இருந்த கரும்பு சோகைக்கு நேற்று தீ வைத்தார். அப்போது காற்று பலமாக வீசியதால் தீயானது அருகில் இருந்த தோட்டத்திற்கு பரவியது.

இதுகுறித்து காடையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு கால தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் அருகிலிருந்த ராஜமாணிக்கம், கோபால், ரத்தினம், அண்ணாமலை, ஆண்டாள் ஆகிய விவசாயிகளின் கரும்பு தோட்டங்களுக்கும் தீ பரவி மளமளவென எரிந்தது.

தீயில் எரிந்து சேதம்

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து கரும்பு தோட்ட உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் மூலம் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஓமலூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு எரிந்து சேதமடைந்தது. மேலும் தோட்டத்தில் இருந்த மின் மோட்டார்கள், வயர்களும் எரிந்து சேதமானதாக தெரிகிறது.

வாக்குவாதம்

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தீயணைப்பு துறையினர் உரிய நேரத்திற்கு வராமல் காலதாமதம் செய்ததே கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானதற்கு காரணம் என கூறி தீயணைப்பு துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story