மோகனூரில் 4 பேர் பலியான சம்பவம்:பட்டாசு வியாபாரி வீட்டில்அதிகாரிகள் ஆய்வுகளையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்


மோகனூரில் 4 பேர்  பலியான சம்பவம்:பட்டாசு வியாபாரி வீட்டில்அதிகாரிகள் ஆய்வுகளையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Jan 2023 6:46 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூரில் வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு வியாபாரி வீட்டில் உள்ள பொருட்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பட்டாசு வியாபாரி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் தில்லைகுமார். பட்டாசு வியாபாரி. இவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசுகளை விற்க குடோனில் இருந்து ஏராளமான பட்டாசுகளை கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தில்லை குமார் வீட்டில் இருந்த பட்டாசு, கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தில்லை குமார், அவருடைய தாயார் செல்வி, மனைவி பிரியங்கா, பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியக்காள் என 4 பேர் பலியாகினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள 5 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது, 62 வீடுகள் சேதமடைந்தன. படுகாயம் அடைந்த 3 பேர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உறவினர்கள்

இந்த நிலையில் தில்லைகுமாரின் ஒரு வீடு முற்றிலும் தரைமட்டமானது. மற்றொரு வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ஒரு பகுதி சேதமடைந்தது. இதற்கிடையே வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை அவருடைய உறவினர்கள், பார்க்கவேண்டும் என கேட்டு கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மோகனூர் தாசில்தார் ஜானகி, மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கைசாமி, வருவாய் ஆய்வாளர் மலர்விழி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் தில்லைகுமாரின் மாமியார் தேன்மொழி (வயது 47), தில்லை குமாரின் அக்காள் கீதா (36), தங்கை அஞ்சலி (28) மற்றும் உறவினர்கள் வீட்டுக்குள் உள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் உறவினர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

களையிழந்த புத்தாண்டு

பட்டாசு வெடித்ததில் உயிர் தப்பிய சிறுமி சஞ்சனாவை தேன்மொழி தனது பாதுகாப்பில் வளர்த்துக் கொள்வதாக கூறினார். மோகனூரை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.

இதனால் மோகனூர் நகர் முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் இன்றி களைஇழந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story