சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து


சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து
x

நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

நாமக்கல்

சாம்பிராணி தொழிற்சாலை

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கூச்சிக்கல் புதூரை சேர்ந்தவர் கவுதம். இவர் செல்லப்பா காலனி பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று விடுமுறை என்பதால் தொழிற்சாலையில் பணி எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் தொழிற்சாலைகளில் இருந்து புகை வந்தது. இது குறித்து அருகில் உள்ளவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எந்திரங்கள் சேதம்

இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தொழிற்சாலையின் உரிமையாளர் வெளியூர் சென்று விட்டதால் துல்லியமான சேத மதிப்பு தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story