திருச்செந்தூர் அருகே வாழை தோட்டத்தில் தீ விபத்து - 7 ஆயிரம் வாழைகள் தீயில் எரிந்து நாசம்
திருச்செந்தூர் அருகே வாழை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆயிரம் வாழைகள் தீயில் எரிந்து நாசமாகியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு பத்துக்கண் வாய்க்கால் பாலம் அருகில் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று மாலை அந்த வாழை தோட்டத்தின் வேலியில் திடீரென தீ பிடித்துள்ளது. பின்னர் காற்றில் வேகமாக பரவிய தீயினால் சுமார் 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 7 ஆயிரம் வாழைகள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாயின.
இதற்கிடையில் தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர், ஆறுமுகநேரி தாரங்கதாரா தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான வாழைகள் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் குறித்து திருச்செந்தூர் வருவாய் துறையினர் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.