100 தென்னைகள், 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்


100 தென்னைகள், 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்
x
திருப்பூர்

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள், 100 தென்னை மரங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

தீப்பிடித்தது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் சுற்றுப்பகுதியில் பலநூறு ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில் கரும்பு, தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. அமராவதி கிளை வாய்க்காலுக்கு அருகில் மாணிக்கம் என்பவரது விளை நிலம் உள்ளது. 3 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது நிலத்தில் கரும்பு அறுவடை தொடங்கி நடந்தது.

இதனால் அறுவடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் காய்ந்த சருகுகளும், அருகில் அறுவடைக்கு தயாரான கரும்புகளும் இருந்தன. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு இந்த விளை நிலத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டது

இதனால் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி விளைநிலத்திற்கு அருகில் ஓடி வந்தனர். ஆனால் தீ மளமளவென்று பரவி எரியத்தொடங்கியது. அருகிலிருந்த குணசேகரன் என்பவரது தோப்பிற்கும் தீ பரவியது. தென்னைமரங்களில் தீப்பிடித்தது. இதனால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயை அணைக்க முடியாமல் மக்கள் பீதி அடைந்ததோடு, உடனடியாக உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு முன்பாகவே 3 ஏக்கர் பரப்பில் தீப்பிடித்து அங்குள்ள கரும்புகள் எரிந்து சாம்பலானது.

இந்த விளைநிலத்திற்கு குறுக்கே மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. தீ உயர பரவியதால் இந்த மின் கம்பிகள் உருகி துண்டிக்கப்பட்டு விளைநிலத்தில் குறுக்கே விழுந்தன. உடனடியாக மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து இந்த மின்கம்பிகளை அப்புறப்படுத்தியதோடு புதிய கம்பிகளை இணைத்து மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு பிறகே மின்வினியோகம் செய்யப்பட்டது.

அரசு நிவாரணம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

தீவிபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விளைநிலத்தில் சொட்டுநீர் பாசனத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்கள், சிறிய இணைப்புகள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்துவிட்டது.

இதன் மதிப்பு ஆயிரக்கணக்கில் இருக்கும். அருகிலிருந்த தோப்பில் காய்க்கும் நிலையிலிருந்த 100 தென்னை மரங்கள் தீயினால் எரிந்து கருகி பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story