ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு


ஓசூர் அருகே  கர்நாடக எல்லையில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து:  10 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Oct 2023 2:28 PM GMT (Updated: 7 Oct 2023 2:30 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஒரு பட்டாசு கடையில் மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர்.

ஓசூர்,

ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனும், ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. அவர் இந்த கடையை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்தது சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியது.இதைக் கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக எல்லையில் ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்கு வரத்தை சீரமைத்தனர். இதையடுத்து போக்குவரத்தில் இயல்பு நிலை ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் 1 சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகி எலும்புக்கூடாகின. மேலும் பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன.


Next Story