தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம்


தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம்
x

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

விழுப்புரம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விழிப்பணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் நகரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், நிலைய அலுவலர் வேல்முருகன், நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாஸ்கர் உள்ளிட்ட தீயணைப்புத்துறையினர் கலந்துகொண்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம், ரெயில்வே நிலையம், மாதா கோவில் சந்திப்பு, கோலியனூர் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

செயல்விளக்கம்

அதனை தொடர்ந்து விழுப்புரம் சாலாமேடு சிறுவர்கள் காப்பகம், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து விபத்தில்லா தீபாவளியாக எப்படி கொண்டாடுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், பெரியவர்களின் கண்காணிப்பில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே திறந்தவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பக்கவாட்டில் நின்று பட்டாசு கொளுத்த வேண்டும், தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள், உடனே மருத்துவரை நாடுங்கள். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story