ரெயிலில் தீ விபத்து; சென்னை-மதுரை செல்ல விமான டிக்கெட் இன்றி தவித்த ரெயில்வே உயரதிகாரிகள் குழு


ரெயிலில் தீ விபத்து; சென்னை-மதுரை செல்ல விமான டிக்கெட் இன்றி தவித்த ரெயில்வே உயரதிகாரிகள் குழு
x

சுற்றுலா ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு விமானத்தில் டிக்கெட் இன்றி ரெயில்வே உயரதிகாரிகள் குழு தவித்தனர்.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலாவுக்காக பயணிகளை ஏற்றி கொண்டு ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. அதில் இருந்த பக்தர்கள் அனைவரும் நாகர்கோவிலில் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனை முடித்து விட்டு அவர்கள் மதுரைக்கு திரும்பியுள்ளனர்.

அந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் சென்ற 2 ரெயில் பெட்டிகள், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை போடி லைன் பகுதியில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இணைப்பு ரெயில் வருவதற்காக அதில் இருந்த பயணிகள் காத்திருந்தனர்.

முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட சிலர், பெட்டியில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, பயணிகளில் சிலர் சமையல் செய்ய முற்பட்டனர். இதில், சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த பெட்டி முழுவதும் தீப்பிடித்து கொண்டது. தொடர்ந்து, மளமளவென தீ பற்றி எரிந்து அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்பினர்.

ஆனால், இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த பகுதிக்கு தெற்கு ரெயில்வேயின் கூடுதல் மேலாளர் கவுசல் கோசல், ரெயில்வே ஐ.ஜி. சந்தோஷ் சந்திரன் ஆகியோர் செல்கின்றனர்.

எனினும், வார இறுதி நாளான இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்வதற்கான டிக்கெட் எதுவும் இல்லை. இதனால், ரெயில்வே துறை உயரதிகாரிகள் சென்னையில் இருந்து மதுரைக்கு தனி ரெயிலில் செல்கின்றனர்.


Next Story