வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் தீ விபத்து
வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீவிபத்து
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பஸ் நிலையம் அருகில் தனியார் வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல அலுவலர்கள் பணிபுரிந்துவிட்டு கடந்த 19-ந்தேதி மாலை அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். அன்று இரவே தபால் நிலையத்தின் உள்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
நேற்றுமுன்தினம் காலை தபால் நிலையத்தின் உள் பகுதியில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.2½ லட்சம் பொருட்கள் சேதம்
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தபால் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர், மானிட்டர், லேப்டாப், ஸ்டாம்புகள் உள்ளிட்ட ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகி நாசமாயின.
இதுகுறித்து மன்னார்குடி வடக்கு உட்கோட்ட அஞ்சல் துணை கண்காணிப்பாளர் லெட்சுமி (வயது53) வடபாதிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.