பட்டாசு பண்டல்களை கவனத்துடன் கையாள வேண்டும்


பட்டாசு பண்டல்களை கவனத்துடன் கையாள வேண்டும்
x

விபத்துகளை தடுக்க பட்டாசு பண்டல்களை கவனத்துடன் கையாள வேண்டும் என வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகி கூறினார்.

விருதுநகர்

பட்டாசு பண்டல்களை லாரியில் இருந்து இறக்கும் போது, இழுத்துச் செல்லக்கூடாது என தமிழ்நாடு பட்டாசு வணிகா்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் இளங்கோவன் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-ஓசூா் அருகே பட்டாசு பண்டல்களை லாரியில் இருந்து இறக்கிய போது உராய்வின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு, 13 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா். பட்டாசு பண்டல்களை லாரியில் ஏற்றும் போதும், இறக்கும் போதும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

லாரியில் இருந்து இறக்கும்போது, பண்டல்களை இழுத்துச் செல்லக் கூடாது. அப்படி இழுத்தால் உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண்டல்களை தூக்கி எறியவும் கூடாது.பண்டல்களை இறக்கும்போதும், ஏற்றும் போதும் இரும்புக் கொக்கியை பயன்படுத்தக்கூடாது. சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணியின்போது, புகைப்பிடிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு பணி செய்யக் கூடாது. சிவகாசியில் 2016-ம் ஆண்டு இதுபோன்று லாரியில் இருந்து பட்டாசு பண்டல்களை இறக்கிய போது, உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டதில் 8 போ் உயிரிழந்தனா்.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினா் லாரி செட் உரிமையாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், பட்டாசு வியாபாரிகள் என இந்த தொழிலுடன் தொடர்பு உள்ள அனைவருக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.பட்டாசுக்கடைக்காரா்கள் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு பண்டல்களை கையாளுவது குறித்து எடுத்துக்கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story