குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நல்நாட்கள் நிதி உதவி திட்டம்
குழந்தைகளையும், தாய்மார்களையும் ஆரோக்கியமாக பாதுகாக்கும் வகையில் குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நல் நாட்கள் நிதி உதவி திட்டத்தை தமிழகத்திலே முதல் முறையாக ராணிப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை,
குழந்தையின் வாழ்வில் 1,000 நாட்கள்
தமிழ்நாட்டில் தாய் சேய் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் 'குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நாட்கள் நிதி உதவி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலே முதலாவதாக ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கலெக்டர் ச.வளர்மதி, ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 101 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப கால சிறப்பு நிதியுதவி முதல் தவணை வழங்கப்பட்டது.
எந்தெந்த மாவட்டங்களில்..
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
வாழ்வின் முதல் 1000 நல்நாட்களுக்கு குழந்தைகளையும், தாய்மார்களையும் எவ்வாறு ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது என்கின்ற திட்டம் தான் வாழ்வின் முதல் 1000 நல்நாட்கள். அதாவது, கருத்தறித்த நாள் தொடங்கி 2 வயது முடிவடையும் நாள் வரை கணக்கில் கொள்ளப்படும், 270-280 நாட்கள் மகப்பேறு காலம், சிசு பருவம் 365 நாட்கள், குழந்தை பருவம் 365 நாட்கள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இத்திட்டமானது இங்கிருக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டும் கிடையாது. தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் கணக்கிடப்பட்டு 14 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்தசோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள 23 வட்டாரங்களில் உள்ள 118 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 74,400 கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான இந்த திட்டம் ரூ.38.20 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
தவணை காலம்
ஒரு வருடத்தில் 37 ஆயிரத்து 200 குழந்தைகள் பிறக்கிறது. இரண்டு வருடங்களுக்கு பார்க்கும்போது 74 ஆயிரத்து 400 குழந்தைகள். இக்குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்திற்காக கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பம் தரித்த உடன் முதல் தவணை (18-20-வது வாரம்) ரூ.1000.
இரண்டாம் தவணை (26-28-வது வாரம்) ரூ.1000, மூன்றாம் தவணை (37-38-வது வாரம்) ரூ.1000, 6-வது மாதம் 4-ம் தவணை ரூ.500, 12-வது மாதம் 5-ம் தவணை ரூ.500, 18-வது மாதம் 6-ம் தவணை ரூ.500, 24-வது மாதம் 7-ம் தவணை ரூ.500 என மொத்தமாக கர்ப்ப காலத்தில் ரூ.3 ஆயிரம்-, 2 வயது வரை குழந்தை வளரும் பருவத்தில் ரூ.2 ஆயிரம் என மொத்தமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இந்த தொகை முதல் குழந்தைக்கு, இரண்டாவது குழந்தைக்கு வழங்கப்படுவது குறித்து கட்டுப்பாடு ஏதும் இல்லை.
இறப்பு விகிதம் குறைந்துள்ளது
இத்திட்டத்தின் மூலம் கர்ப்பகால ரத்தசோகை தடுக்கப்படும். அதேபோன்று பேறுகால குழந்தைகள் எடை சீரானதாக இருக்கும். 2 வருடங்களுக்கான குழந்தைகள் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் உங்களுக்கு வழங்கும் இந்த நிதி உதவிக்கான பணத்தினை கட்டாயம் உங்கள் உடல் ஊட்டச்சத்தையும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தை இறப்பு விகிதம் இந்தியாவில் ஆயிரத்திற்கு 28, தமிழ்நாடு அளவில் ஆயிரத்திற்கு 13, மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சத்திற்கு 97, தமிழ்நாடு அளவில் ஒரு லட்சத்திற்கு 54 என்ற விகிதத்தில் உள்ளது. இதனை மேலும் குறைத்திடும் வகையில் முதல்-அமைச்சர் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னோடி மாநிலம்
விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது. கல்வியிலும் சுகாதாரத்திலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது மக்கள் நலத்திட்டங்கள், கட்சி பேதமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
விழாவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல இணை இயக்குனர் நிர்மல்சன், துணை இயக்குனர் மணிமாறன், திமிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமேஷ், பேரூராட்சி தலைவர் மாலா இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமுதாய கூடம்
தொடர்ந்து ஆற்காடு ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்சியில் மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.62 லட்சம். மதிப்பீட்டில் கட்டபட்ட சமுதாயகூடம், கத்தியவாடி கிராமத்தில் ரூ.10 லட்சத்து 93ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம், பூட்டுத்தாக்கு ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி கூடுதல் கட்டிடம், கீழ்மின்னல் கிராமத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி கூடுதல் கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
விழாவில் ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத்தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், ஊராட்சிமன்ற தலைவர்கள் அருங்குன்றம் ஏ.தயாளன், கத்தியவாடி கே.பி.குருநாதன், பூட்டுதாக்கு அருண், கீழ்மின்னல் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தண்டயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.