ஊட்டி அருகே பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஊட்டி அருகே பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஊட்டி அருகே பழங்குடியின கிராமத்துக்கு சென்று மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டார். அப்போது அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

ஊட்டி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு வந்தார். கோவையில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, ஊட்டி புறப்பட்டு சென்றார். அங்கு மலர் கண்காட்சி தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அருகே உள்ள பகல்கோடு மந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். தொடர்ந்து அவர் அங்குள்ள தோடர் இன மக்களின் பாரம்பரிய கோவிலை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அழிந்து வரும் எருமை இனங்களை பாதுகாக்கும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்படும் எருமை அபிவிருத்தி மையத்திற்கான இடத்தையும் நேரில் ஆய்வு செய்தார்.

குறைகளை கேட்டறிந்தார்

அப்போது அந்த பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. எனினும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடை பிடித்தபடி தோடர் பழங்குடியின கிராமத்தை பார்த்தார். பின்னர் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தோடர் இன மக்கள் தங்கள் கிராமங்களில் இதுவரை மண் சாலைகள் மட்டுமே உள்ளது. அதை தார் சாலைகளாக மாற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் வனப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அந்த தடையை நீக்க வேண்டும், ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சும் கற்பூர, சீகை மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் தோடர் இன மக்கள் முன் வைத்தனர்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

உடனடியாக இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் கலெக்டர் அம்ரித் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தொடர்ந்து தோடர் பழங்குடியின மக்களிடம் அவர்களது வாழ்க்கை மற்றும் கலாசாரமுறை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களது கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

முதல்-அமைச்சர் வருவது முதல் முறை

அப்போது பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சர் ஒருவர், தங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல்முறை என்றும், தோடர் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

மேலும் நீலகிரி மாவட்ட அளவில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தனி இணையதளம் தொடங்கி தங்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதற்கும் நன்றி தெரிவித்தனர்.

அனைத்துவித உதவிகள்

வனப்பகுதியை 33 சதவீதமாக பெருக்குவதாக அறிவித்து வனப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் காப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கும் தோடர் இன மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின மக்கள் மத்தியில் பேசும்போது, எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை தொடர்புகொள்ளலாம். உங்களுக்காக அரசு அனைத்துவித உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., கலெக்டர் அம்ரித் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வாகன ஓட்டிகள் பாராட்டு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது தான் செல்வதற்காக போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கனரக வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் வழக்கம்போல சென்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த செயலை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

1 More update

Next Story