அந்தியூர் குருநாதசாமி கோவிலில் முதல் வன பூஜை; ஆயிரக்கணக்கான கிடாய்களை பலிகொடுத்து நேர்த்திக்கடன்
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் நடந்த முதல் வனபூஜையில் ஆயிரக்கணக்கான கிடாய்களை பலிகொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்தியூர்
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் நடந்த முதல் வனபூஜையில் ஆயிரக்கணக்கான கிடாய்களை பலிகொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குருநாதசாமி
அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் புகழ்பெற்ற குதிைர சந்தையுடன் தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவுக்காக கடந்த மாதம் 19-ந் தேதி கோவிலில் பூச்சாட்டப்பட்டது. 26-ந் தேதி கோவிலில் கொடி ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று, முதல் வனபூஜை நடந்தது. இதற்காக புதுப்பாளையம் மடப்பள்ளியில் உள்ள கோபுர குழுக்கையில் இருந்து குருநாதசாமி, பெருமாள், காமாட்சி அம்மனின் ஆபரணங்கள் எடுக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த குழுக்கையில் இருந்து சாமியின் ஆபரணங்கள் எடுக்கப்படும்.
கிடாய்களை பலிகொடுத்தனர்...
ஆபரணங்கள் சாமிகளுக்கும், காமாட்சியம்மனுக்கும் அணிவிக்கப்பட்ட பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் குருநாதசாமியும், பெருமாளும் எழுந்தருளினர். காமாட்சியம்மன் பல்லக்கில் வைக்கப்பட்டார்.
இதையடுத்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் மகமேறு தேர்களையும், பல்லக்கையும் தோளில் சுமந்துகொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வனக்கோவிலுக்கு சென்றனர்.
அப்போது வழிநெடுக பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து சாமிக்கு படைத்தனர். வனக்கோவிலை அடைந்ததும் அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கான கிடாய்களை பலிகொடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மகமேறு தேர்களும், பல்லக்கும் மீண்டும் மடப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படும்.
குதிரை சந்தை
இந்தநிலையில் திருவிழாைவயொட்டி கோவில் அருகே வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை குதிரை மற்றும் மாட்டு சந்தை நடைபெறுகிறது. 9-ந் தேதி 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேர்களில் மீண்டும் சாமிகளை எழுந்தருள செய்து தேர்த்திருவிழா நடைெபறும்.
திருவிழா மற்றும் குதிரை சந்தையை காண லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளன. 200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
அந்தியூர், பர்கூர், வெள்ளித்திருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.