முதலாமாண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
வால்பாறை, பொள்ளாச்சி அரசு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
வால்பாறை
வால்பாறை, பொள்ளாச்சி அரசு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு வரவேற்பு
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. கல்லூரியில் சேர்ந்து உள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் கல்லூரிக்கு வந்திருந்தனர்.கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், வால்பாறை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் செல்லமுத்து குமாரசாமி முன்னிலை வகித்தார். வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தலைமை தாங்கி பேசும்போது, நல்லதை பகிருங்கள் நண்பர்களாகவே வாழ கற்றுக்கொள்ளுங்கள். படிக்கும் வயதில் இருந்தே ஒழுக்கத்துடன் இருக்க பழக வேண்டும். பெண்கள் சாதிக்கும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மரக்கன்றுகள் நடவு
உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம். செல்போன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரிக்குள் முதலாமாண்டில் அடியெடுத்து வைத்து உள்ள உங்கள் வாழ்க்கைக்கு இதுவே ஒரு திருப்புமுனை. உங்கள் வாழ்க்கையில் யாராக ஆக வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜசேகரன், வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுமதி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் புஷ்பலதா, ஆங்கிலத் துறை தலைவர் செந்தில் நாயகி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் நிர்மலா தேவி, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.