ராமேசுவரத்தில் மீனவ பிரதிநிதிகள்- விவசாய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்


ராமேசுவரத்தில் மீனவ பிரதிநிதிகள்- விவசாய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
x

கச்சத்தீவை மீண்டும் மீட்பது குறித்து ராமேசுவரத்தில் மீனவ பிரதிநிதிகள்- விவசாய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக காவிரி, வைகை, கிருதுமால் பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை,

கச்சத்தீவை மீண்டும் மீட்பது குறித்து ராமேசுவரத்தில் மீனவ பிரதிநிதிகள்- விவசாய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக காவிரி, வைகை, கிருதுமால் பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட நாளான நாளை (28-ந்தேதி) மீண்டும் அதை மீட்பது குறித்து ராமேசுவரத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு மீனவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவருமான அர்ச்சுணன் சிவகங்கையில் கூறியதாவது:-

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு பாத்தியப்பட்ட ராமேசுவரம் கிராமம் சர்வே எண் 1250-ல் 285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் உள்ளது கச்சத்தீவு. இந்திய அரசு இலங்கை அரசுக்கு அரசியல் நோக்கங்களுக்காகவே கச்சத்தீவை 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தாரை வார்த்தது.

கடல் எல்லை

இந்தியாவின் நிலப்பரப்பை வேறு நாடுகளுக்கு கொடுப்ப தற்குமுன் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசியல் சாசனப் பிரிவு 368 அப்பட்டமாக மீறப்பட்டது. கடல் எல்லைகளை பிரித்துக்கொள்வது சம்பந்தப்பட்ட 1958-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா ஒப்பந்தம் விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை. கச்சத்தீவு ஒப்பந்தம் 1974-ல் ஜூன் மாதம் 26-ந்தேதி கொழும்புவிலும் ஜூன் மாதம் 28-ந் தேதி புதுடில்லியிலும் கையொப்பம் இடப்பட்டது.

எனவே கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கும் முரணானது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல், பொருளாதார சமூக நெருக்கடியைப் பயன்படுத்தி மத்திய அரசு ராஜதந்திர நிர்ப்பந்தம் மூலம் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும். இப்போது முடியாவிட்டால் கச்சத்தீவை எப்போதும் மீட்க முடியாது.

மீனவர்கள் பிரச்சினை

இலங்கை ராணுவத்தால் நமது மீனவர்கள் கொல்லப் படுவதும் அவர்களது உடமைகள் அழித்து சேதப்படுத்துவதும் கண்ணீர் கதையாக தொடர்கிறது. கச்சத்தீவு பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை மட்டும் அல்ல. இது நாட்டின் முக்கியமான பிரச்சினை.

எனவே தமிழகத்தில் முதல் முயற்சியாக கச்சத்தீவு ஒப்பந்தம் 48 ஆண்டுகளுக்கு முன்பு புதுடில்லியில் கையெழுத்தான அதே ஜூன் மாதம் 28-ந் தேதியில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் 15 மாவட்ட நிர்வாகிகளும், பல்வேறு மீனவர்கள் சங்க நிர்வாகிகளும் ராமேசுவரத்தில் சந்தித்து கலந்துரையாடி கச்சத்தீவை மீட்பதற்கான விவசாயிகள், மீனவர்கள் கூட்டு முயற்சி நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்க இருக்கிறோம். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவரும் இந்த முன்னெடுப்புக்கு பேராதரவு தர பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story