சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு
கடலூர் துறைமுகம் அருகே சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்
கடலூர் முதுநகர்
மீனவர்கள் விரட்டியடிப்பு
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா?, எஸ்.டி.பி., ஐ.பி.விசைப்படகுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்கின்றனரா? என மீன்வளத் துறை அதிகாரிகள் அவ்வப்போது கடலிலும், மீன்பிடி துறைமுகத்திலும் கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கடலூர் தேவனாம்பட்டினம் கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளுடன் படகில் மீன்பிடிக்க தயாராக இருந்த மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரட்டியடித்தனர்.
சுருக்குமடி வலை பறிமுதல்
இந்த நிலையில் சொத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதாக மீன்வளத்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளர் சதுருதீன், சார் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் சொத்திக்குப்பத்திற்கு நேற்று மதியம் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மீனவரிடம் இருந்த ஒரு சுருக்குமடி வலையை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரிடம் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் சிறைபிடிப்பு
இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பயன்படுத்தாமல் கரையோரம் வைத்திருக்கும் மீன்பிடி வலையை பறிமுதல் செய்யக்கூடாது என்று கூறி மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று திரண்டு வந்து மீன்வளத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து 3 மணி நேர சிறைபிடிப்புக்கு பின், மீன்வளத்துறை அதிகாரிகளை போலீசார் மீட்டனர்.
இதற்கிடையே சொத்திக்குப்பம் கடல் பகுதியில் 5 நாட்டிக்கல் மைல்களுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து 7 இழு வலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.