மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை:தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு


தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக புதன்கிழமை 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. சீலா மீன் ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக நேற்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. சீலா மீன் ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சூறாவளி காற்று

தென்மேற்கு பருவமழை மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும்.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடலுக்கு செல்லவில்லை

அதன்படி, நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். 2-வது நாளாக நேற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

வெள்ளப்பட்டி, சிலுவைப்பட்டி, தாளமுத்துநகர், ராஜபாளையம், திரேஸ்புரம், இனிகோநகர், புதிய துறைமுகம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்கள் விலை உயர்வு

இதன் காரணமாக மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மீன் வியாபாரி பக்ருதீன் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்களின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது காற்று காரணமாக படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் கேரளாவுக்கு தேவையான மீன்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. கேரள வியாபாரிகள் அதிக அளவில் தூத்துக்குடியில் இருந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

நேற்று தூத்துக்குடியில் ஒரு கிலோ ஊளி மீன் ரூ.400 முதல் ரூ.450 வரையும், விள மீன் ரூ.500-க்கும், சீலா (வஞ்சிரம்) ரூ.1300 முதல் ரூ.1400 வரையும், பாறை மீன் ரூ.500-க்கும், கலிங்க முரள் ரூ.350 முதல் ரூ.400 வரையும், வாளை முரள் ரூ.250-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், சாளை மீன் ரூ.180-க்கும் விற்பனையானது. கேரளாவில் படகுகள் கடலுக்கு செல்ல ஆரம்பித்த பிறகே மீன்களின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story