மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை


மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வீசும் சூறைக்காற்று காரணமாக அப்பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடலில் இருந்து பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர். கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறை காற்று காரணமாக சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக குவிந்து காட்சியளிக்கிறது.

திடீரென உருவான இந்த மணல் குன்றுகளால் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது.

மீன்பிடி காலம்

வழக்கமாக கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த ஆறு மாத சீசன் காலத்தில் நாகை, திருவாரூர் தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடித்து தொழில் செய்வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசன் தொடங்கப்படவில்லை. இதற்கு காரணம் வழக்கத்துக்கு மாறாக தற்போது வீசும் சூறைக்காற்று. இதனால் மீனவர்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே மீன்பிடி சீசன் காலம் தொடங்க இன்னும் இரண்டு வாரமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். இந்த கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story