பழவேற்காட்டில் மீன் பிடிப்பதில் தகராறு; மீனவர்களிடையே மோதல்; 6 பேர் படுகாயம்


பழவேற்காட்டில் மீன் பிடிப்பதில் தகராறு; மீனவர்களிடையே மோதல்; 6 பேர் படுகாயம்
x

பழவேற்காட்டில் ஆண்டிக்குப்பம் மீனவர்களிடையே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலால் 6 பேர் படுகாயமடைந்தனர். பதற்றம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்

மோதல் வெடித்தது

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பழவேற்காடு பகுதியான ஆண்டிக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் செல்வம், சங்கர் ஆகிய ஒரு தரப்பினரும், ராஜா, தவமணி ஆகிய மற்றொரு தரப்பினரும் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்து வந்தனர்.

இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மீன்பிடிக்கும் இடத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டு அது மோதலாக வெடித்தது. இந்த மீனவர்கள் பிரச்சினை குறித்து மீன்வளத்துறையினர், வருவாய் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை.

6 பேர் காயம்

இந்தநிலையில் ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே நேற்று திடீர் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் செல்வம் மற்றும் சங்கர் தரப்பினர் தாக்கியதில் ஸ்ரீதர்(வயது 45), வசந்த் (35), ஸ்டாலின் (45), செந்தில்குமார் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

ராஜா மற்றும் தவமணி தரப்பினர் தாக்கியதில் மணிபாலன் (40), சேகர் (45) ஆகியோர் தாக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கிரியாசக்தி தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த 6 பேரையும் பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து 6 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பதட்டமான சூழ்நிலை

இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பழவேற்காடு பகுதியில் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வக்குமார் அங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முகாமிட்டுள்ளனர். போலீஸ் துணை சூப்பிரண்டு கிரியாசக்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story