கூடுதாழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


கூடுதாழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை-தூத்துக்குடியில் நாளை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து உள்ளனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை-தூத்துக்குடியில் நாளை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து உள்ளனர்.

தொடர் போராட்டம்

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கடந்த 11-ந்தேதி முதல் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தினமும் கண்டன ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி உள்பட பல்வேறு வகையான போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

இவர்களின் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாளை வேலைநிறுத்தம்

மாலையில் அங்கு சமுதாய கூட்டம், போராட்டக்குழு தலைவர் ரோசிங்டன் தலைமையில் நடந்தது. அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் கயாஸ், சென்னை பரதர் நலச்சங்க தலைவர் சகாயராஜ், மாநில மீனவர் அணி துணை செயலாளர் எரிட்ஜூடு பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு அளவில் மீனவர் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story