மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் - மீன்வரத்து குறைவால் ஏமாற்றம்


மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் - மீன்வரத்து குறைவால் ஏமாற்றம்
x

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவுக்கு மீன்கள் கிடைக்காததால் நஷ்டத்துடன் திரும்பினர்.

ராமேஸ்வரம்,

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 61 நாட்கள் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட எல்லை வரை சிறியவகை படகுகள் (பைபர் படகுகள்) மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவுக்கு மீன்கள் கிடைக்காததால் நஷ்டத்துடன் திரும்பினர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

போதிய அளவு மீன் வரத்து கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்தனர். ஒரு படகிற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நடுக்கடலில் காற்று நான்கு திசைகளிலும் மாறி மாறி வீசியதால் மீன் வரத்து குறைவாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story