மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா


மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா
x
தினத்தந்தி 14 May 2023 6:45 PM GMT (Updated: 14 May 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் 20 டன் மீன்களை பொதுமக்கள் பிடித்து அள்ளிச்சென்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தில் 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையில் மீன்பிடிக்க அதே பகுதியை சேர்ந்த சிலர் குத்தகை எடுத்தனர். பின்னர் அவர்கள் கண்ணாடி, கட்லா, ரோகு, வவ்வால், ஜிலேபி, விறால் போன்ற பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை அணையில் விட்டு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் அணையில் நீர்மட்டம் 12 அடியாக குறைந்ததை தொடர்ந்து குத்தகைத்தாரர்கள் அணையில் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். இதனிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 24 அடியாக உயர்ந்ததால் மீன்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மீன்பிடிப்பதற்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அகரக்கோட்டாலம், அணைகரைக்கோட்டாலம், வாணியந்தல், தண்டலை, சூளாங்குறிச்சி, பெருவங்கூர், பிச்சநத்தம், பரமநத்தம், ஆலத்தூர், அழகாபுரம், அரியபெருமானூர், கல்லேரிக்குப்பம், ராயபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் அணையில் மீன்பிடி திருவிழா நடப்பதாக தகவல் காட்டுத்தீ போல் பரவியது.

அணையில் குவிந்த பொதுமக்கள்

இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 4 மணி அளவில் மணிமுக்தா அணையில் மீன்பிடிக்க குவிந்தனர்.

அப்போது அங்கு வந்த குத்தகைக்தாரர்கள், மீன் பிடி திருவிழா நடைபெறவில்லை. மேலும் குத்தகைக்காலமும் முடியவில்லை. எனவே மீன்பிடிக்க யாரும் அணைக்குள் இறங்கவேண்டாம் என கூறினர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் அணையில் இறங்கி போட்டி போட்டு பொதுமக்கள் மீன் பிடித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் பொதுமக்கள் மிகவும் தீவிரமாக மீன்பிடித்து கொண்டிருந்ததால், அவர்களை போலீசாரால் தடுக்கமுடியவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்து சென்றனர். பொதுமக்களின் கையில் 3 கீலோ எடை கொண்ட மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரூ.10 லட்சம் நஷ்டம்

ஒவ்வொருவரும் 10 கிலோ முதல் 100 கிலோ வரை மீன்பிடித்து அள்ளிச்சென்றனர். மொத்தம் சுமார் 20 டன் அளவிற்கு மீன்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே குத்தகை காலம் முடிவதற்குள் பொதுமக்கள் அணையில் இறங்கி மீன்பிடித்து சென்றதால், தங்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குத்தகைத்தாரர்கள் தெரிவித்தனர்.


Next Story