மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு: அண்ணன் கொலைக்கு பழிதீர்த்ததாக வாலிபர் வாக்குமூலம்
மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். அண்ணன் கொலைக்கு பழிக்கு பழிதீர்த்ததாக மூளையாக செயல்பட்ட வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
மீன்வியாபாரி வெட்டிக்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு, கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 48). மீன் வியாபாரி. இவரது மனைவி ஜனகா. இருவரும் கடந்த 13-ந்தேதி ஒட்டேரி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஒட்டி அமைந்துள்ள சாலை பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. தடுக்க முயன்ற அவரது மனைவியும் சரமாரியாக தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த மீன் வியாபாரி பார்த்திபனின் மனைவி ஜனகா குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
6 பேர் கைது
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 5 தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மண்ணிவாக்கம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமடக்கி விசாரித்த போது காரில் இருந்த 6 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, மண்ணிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த பிரசாத் (வயது 22), அஜய் (22), தினேஷ்(28), பிரவீன்(20), சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (20), ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரதீப் (19) ஆகிய 6 பேரும் சேர்ந்து மீன் வியாபாரியை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
வாக்குமூலம்
இந்த கொலையில் மூளையாக செயல்பட்ட பிரசாத் போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறியதாவது:- கடந்த 2021-ம் ஆண்டு எனது அண்ணன் பிரேம்குமாரை அடித்து கொலை செய்தார்கள். இதற்கு மூல காரணம் மீன் வியாபாரி பார்த்திபன் என நினைத்து அவரை பழிக்குப்பழி வாங்க நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திபனை வெட்டி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.