சிறை பணியாளர்களுக்கு உடற்பயிற்சி மையம் தொடக்கம்


சிறை பணியாளர்களுக்கு உடற்பயிற்சி மையம் தொடக்கம்
x

சேலம் மத்திய சிறை குடியிருப்பு வளாகத்தில் சிறை பணியாளர்களுக்கு புதிதாக உடற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சேலம்

உடற்பயிற்சி மையம்

சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் சுமார் 330-க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினமும் 3 ஷிப்ட் முறையில் சிறையில் பணிக்கு சென்று வருகின்றனர். சிறைக்காவலர்கள் தங்களது உடல்திறனை மேம்படுத்தும் வகையில் சிறைக்காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிய உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். சிறை அலுவலர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.

கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு புதிய உடற்பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் உடற்பயிற்சி மையத்திற்குள் சென்று அங்குள்ள உடற்பயிற்சி மேற்கொள்ளும் நவீன கருவிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சிறைக்காவலர்கள் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

உடல் ஆரோக்கியத்துடன்

இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் நிருபர்களிடம் கூறுகையில், சிறைக்காவலர்கள் மட்டுமின்றி அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்தால் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்கும். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் சிறைக்காவலர்களுக்கு உடற்பயிற்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். சிறைக்காவலர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். காலை, மதியம், மாலை என மூன்று வேளையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, சிறைக்காவலர்கள் தங்களது பணி நேரத்தை முடித்துவிட்டு ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்து கொள்ளலாம், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் உள்பட சிறைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story