டாக்டர்கள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு


டாக்டர்கள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு
x

டாக்டர்கள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு

கோயம்புத்தூர்

கோவை

தனியார் ஆஸ்பத்திரி

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் அருகே எல்லன் என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இதன் நிர்வாக இயக்குனரான ராமச்சந்திரன் (வயது 75) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு வாடகையாக கொடுத்தார். இதையடுத்து இந்த ஆஸ்பத்திரி சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த ஆஸ்பத்திரிக்குள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தனக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் வாடகை கொடுக்கவில்லை என்றும், ரூ.100 கோடி சொத்துக்களை டாக்டர் உமாசங்கர், மேலாளர் மருதவான் ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும் டாக்டர் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

காவலில் எடுத்து விசாரணை

இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரான டாக்டர் ராமச்சந்திரன்தான் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்த காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டாக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ் மற்றும் மூர்த்தி, முருகேசன், டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே, 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்தது நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கோவையில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து நீதிபதி சஞ்செய் பாஸ்கர், டாக்டர்கள் 2 பேர் உள்பட 5 பேரையும் வருகிற 4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story