ரெயில்வே மேம்பாலத்தில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி மும்முரம்

காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்குடி,
காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேம்பாலம்
திருச்சியில் இருந்து ராமேசுவரத்திற்கு செல்லும் பயணிகளின் நேரத்தை குறைக்கும் பொருட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் தற்போது முழுவதும் நிறைவு பெற்று ஆங்காங்கே உயர் மட்ட பாலங்களும், சில இடங்களில் தாழ்வான பாலங்கள் எனவும், சில இடங்களில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டு தற்போது இந்த சாலையில் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ரெயில்வே கிராசிங் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் பணியும் நடைபெற்று நிறைவு பெற்றது.
இரும்பு கர்டர்கள்
இதில் அந்த ரெயில்வே கிராசிங் பகுதிக்கு மேல் பகுதியில் மட்டும் இடைவெளி விட்டு ரெயில்வே துறை அனுமதிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் நெடுஞ்சாலைத்துறை காத்திருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ரெயில்வே துறை சார்பில் அனுமதி கிடைத்த பின்னர் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு நடத்தினர்.
அதன் பின்னர் அவர்கள் மேம்பாலத்தின் மேல் இரும்பு கர்டர்கள் அமைத்து அதன் மேல் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியதையடுத்து தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ராட்சத அளவிலான இரும்பு கர்டர்கள் கொண்டு வரப்பட்டு தற்போது மேம்பாலத்தின் மேல் இரும்பு கர்டர்கள் ராட்சத எந்திரம் மூலம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஒப்புதல்
இந்த பணி இன்னும் 5 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும் என தெரிகிறது. இதையடுத்து மீண்டும் ரெயில்வே துறை அதிகாரிகள் இங்கு ஆய்வு நடத்தி ஏற்கனவே இந்த ரெயில்வே பாதையில் மின் வழித்தடமும் செல்கிறது. அதன் உறுதி தன்மையை அறிந்த பின்னர் மீண்டும் இந்த சாலையை முழு ஒப்புதல் அளிக்க உள்ளனர்.
அதன் பின்னர் அந்த இரும்பு கர்டர்கள் மேல் புதிய தார்சாலை அமைக்கும் பணியும், அதை தொடர்ந்து மேம்பாலம் முழுவதும் சுமார் 84 மின் விளக்கு அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இன்னும் 2 மாத காலத்திற்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவு பெற்று இந்த பாலத்தின் மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.