கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு


கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:45 PM GMT)

வால்பாறையில் பலத்த மழை பெய்ததால் கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தண்ணீரில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பலத்த மழை பெய்ததால் கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தண்ணீரில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பலத்த மழை

கோவை மாவட்டம் வால்பாறையில் இதமான காலநிலை நிலவுவதால், கோடைகாலத்தை கழிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அங்குள்ள கூழாங்கல் ஆற்றில் அவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்வதை காண முடிகிறது.

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் வால்பாறை அருகில் உள்ள சின்ன கல்லாறு பூணாச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. அங்கு 2 மணி நேரத்தில் 70 மி.மீ. மழை கொட்டியது. இதன் காரணமாக கூழாங்கல் ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்

இதை சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள், ஆற்றில் இருந்து அவசர அவசரமாக கரைக்கு ஓடி வந்தனர். எனினும் ஆற்றில் குளித்து கொண்டு இருந்த சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த ராமச்சந்திரன், சுகன்யா மற்றும் அவர்களது மகன் பரசுராமன் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் ஆற்றின் நடுவில் உள்ள மண் திட்டு மீது ஏறி நின்றதால், வெள்ளத்தில் அடித்து செல்லப்படவில்லை.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் நீந்தி சென்று, மண் திட்டில் நின்றிருந்த 3 பேருக்கும் பாதுகாப்பு கவச உடை அணிவித்தனர். தொடர்ந்து கயிறு கட்டி 3 பேரையும் பத்திரமாக கரைக்கு மீட்டு கொண்டு வந்தனர். இதனால் தீயணைப்பு வீரர்களுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.


Next Story