பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை பகுதியில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி வெள்ளநீர் வேகமாக சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை அணை பகுதியில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி வெள்ளநீர் வேகமாக சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. தற்போதைய நிலையில் 70 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வைகை ஆற்று பகுதியில் சீறிப்பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளது. பார்த்திபனூர் மதகு அணைக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் அதில் வலது, இடது பிரதான கால்வாய், பரளை ஆறுகளுக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டது.
மீதம் உள்ள தண்ணீர் ராமநாதபுரம் நோக்கி வந்தது. இந்த தண்ணீரில் வைகை ஆற்று கால்வாய் பகுதியில் இருந்து மாவட்டத்தின் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் எடுத்ததுபோக 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலையில் பெரிய கண்மாயில் 5½ அடி தண்ணீர் உள்ளதால் கண்மாயின் பாதுகாப்பு கருதி சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்
சக்கரக்கோட்டை கண்மாயும் குடியிருப்புகளை பாதிக்கும் வகையில் நிரம்பி வருவதால் தண்ணீர் சிறிதளவே திறந்துவிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள தண்ணீர் காவனூர் பெரிய கண்மாய் கலுங்கு வழியாக கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதிகளவில் தண்ணீர் கடலுக்கு திறக்கப்பட்டுள்ளதால் இந்த முறையும் தண்ணீரை தேக்க வழியின்றி கடலில் கலந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது, வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்துவிட்டபோதிலும் கனமழை காரணமாக பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த தண்ணீர் இரவுக்குள் பெரிய கண்மாய்க்கு முழுமையாக வந்து சேரும். அப்போது காவனூர், தொருவளுர் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் தண்ணீர் புகும் ஆபத்து உள்ளது. இதன்காரணமாக மேற்கண்ட ஆபத்தான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகளவில் வரும் வாய்ப்பு உள்ளதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கரைகள் உடைப்பெடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க சுமார் 10 ஆயிரம் சாக்குகள் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து கண்காணித்து வருகிறோம். காவனூர் பாலம் பகுதியில் ஆபத்தை தவிர்க்க விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே உபரி நீர் மற்றும் ராமநாதபுரம் கணக்கில் உள்ள தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீரை முறையாக சேமிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகியது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்ட நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள முகவை ஊருணி, லட்சுமிபுரம், நீலகண்டி, செம்பொன்குண்டு, கிடாவெட்டு ஊருணி, சாயக்கார ஊருணி, சிதம்பரம் பிள்ளை ஊருணி, நொச்சிவயல் ஊருணி உள்ளிட்ட 17 ஊருணிகள் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கின்றன.
கடந்த காலங்களில் இந்த ஊருணிகளில் தண்ணீரை நிரப்பியதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போது துரதிஷ்டவசமாக நீர்நிலைகளை நிரப்ப தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை முடிவடைவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுத்து கடலில் தண்ணீர் வீணாக கலப்பதை தடுத்து ராமநாதபுரம் மண்ணின் நிலத்தடி நீர்வளத்தை காக்க வேண்டும் என்றனர்.