கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சரஸ்வதிவிளாகம், மாதிரவேளூர், கொன்னகாட்டுபடுகை, பனங்காட்டங்குடி, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளை மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மயிலாடுதுறை காவிரி வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் கூறுகையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்து வருவதால், அணையில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் இன்று(திங்கட்கிழமை) முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று பழையாறு துறைமுகம் அருகே கடலில் கலக்க இருக்கிறது. இதனால் இன்று மாலை முதல் கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி அளவுக்கு மேல் தண்ணீர் வரத்து இருக்கும். இதன் காரணமாக கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது.ஆற்றின் கரையோரம் உள்ளவர்கள் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் கரையோர கிராமங்களைச் சேர்ந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டிச் சென்று பாதுகாக்க வேண்டும் என்றார்.



Next Story