சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு - ஓசூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்


சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு - ஓசூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
x

சந்திராம்பிகை ஏரி முழுவதுமாக நிரம்பி, நேற்று இரவு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை காரணமாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓசூர் அருகே உள்ள சந்திராம்பிகை ஏரி முழுவதுமாக நிரம்பி, நேற்று இரவு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.

இதனால் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கேலக்சி பார்க், ஓசூர் வேலி, கே.சி.சி. நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் தீயணைப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகளின் மேல்தளங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு மீட்புப் படையினர் படகுகள் மூலமாக உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மீட்புப் படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


Next Story