கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் நகரில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று மதியம் ஒரு மணி முதல் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் எதிரொலியாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரிச்சாலையில் தண்ணீர் தேங்கியதோடு, சாலையோர கடைகளுக்குள் மீண்டும் வெள்ளம் புகுந்தது. இதேபோல் கொடைக்கானல் நகர் மற்றும் வனப்பகுதியில் உள்ள அனைத்து அருவிகள், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

குறிப்பாக நகரை ஒட்டியுள்ள வட்டக்கானல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் புதிய அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி உபரிநீர் வெளியேறியது. இதனால் பழைய அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி ஆகியவையும் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.

கனமழை காரணமாக அவ்வப்போது மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பிரையண்ட் பூங்கா பகுதியில் உள்ள தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைப்பு பணியை முடுக்கி விட்டனர். இதற்கிடையே பேத்துப்பாறை பகுதியில் செல்வக்குமார் என்பவரின் வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.


Next Story