திருப்பூரில் மல்லிகை பூ கிலோ ரூ.3,200-க்கு விற்பனை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு இருப்பதால் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு இருப்பதால் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பனியால் வரத்து குறைவு
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மார்க்கெட்டிற்கு அனைத்து வகை பூக்களும் தினமும் சுமார் 20 டன்னுக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருவதால் திருப்பூருக்கு பூக்களின் வரத்து அடியோடு சரிந்துள்ளது.
தற்போது தினமும் சுமார் 10 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அதிலும் குறிப்பாக சராசரி நாட்களில் மல்லிகைப்பூவின் வரத்து தினமும் சுமார் 1 டன்னுக்கு அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று சுமார் 150 கிலோ மட்டுமே மல்லிகை பூ வந்தது.
மல்லிகை ரூ.3,200
இவ்வாறு பூக்களின் வரத்து குறைவாக இருந்ததாலும், முகூர்த்த தினம் வருவதை முன்னிட்டும் திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. சராசரி நாட்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று கிலோ ரூ.3,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், முல்லை ரூ.1,800, ஜாதிமல்லி ரூ.1,200, சம்பங்கி ரூ.200, பட்டு பூ ரூ.150, அரளி பூ ரூ.320, செவ்வந்தி ரூ.200 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. பூக்களின் விலை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், கடந்த காலங்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400-க்கு கிடைத்த நிலையில் நேற்று 100 கிராம் மல்லிகைப்பூ ரூ.320-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.