சேலத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி
சேலத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை வீழ்ச்சி
சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வணிக வளாகத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் கிலோ ஆயிரம் ரூயாயை தாண்டி விற்பனை செய்யபடும். ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பூக்கள் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ரூ.400-க்கு விற்பனை
குண்டுமல்லி நேற்று கிலோ ரூ.400-க்கும், சன்னமல்லி ரூ.350-க்கும், முல்லை ரூ.140-க்கும், ஜாதிமல்லி ரூ.240-க்கும், காக்கட்டான் ரூ.160-க்கும், கலர் காக்கட்டான் ரூ.100-க்கும், மலைக்காக்கட்டான் ரூ.160-க்கும் விற்பனையானது. இதேபோல் வெள்ளை அரளி, மஞ்சள் அரளி கிலோ ரூ.70-க்கும், செவ்வரளி ரூ.100-கும், நந்தியாவட்டம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகை நடைபெற இருப்பதால் பூக்களின் விலை வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளது என்றனர்.