கோவையில் பூக்கள் விலை குறைந்தது
கோவையில் பூக்கள் விலை குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200-க்கு விற்பனையானது.
கோவையில் பூக்கள் விலை குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200-க்கு விற்பனையானது.
பூக்களின் விலை குறைந்தது
கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும்.
தற்போது பனி காலம் என்பதால் கோவை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. தற்போது முகூர்த்த சீசன் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.
ஆனால் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,500 வரை விற்பனையானது.
ஆனால் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200 முதல் ரூ.1,600 வரை விற்பனையானது. பூக்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றனர்.
இது குறித்து பூமார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-
மல்லிகைப்பூ ரூ.1,200
கடும் பனி மற்றும் மழை காரணமாக பூமார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்து விலையும் குறைந்து உள்ளது.
ரூ.2,500-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.1,200 முதல் ரூ.1,600 வரையும், ரூ.200 முதல் ரூ.250 வரை விற்ற செவ்வந்தி ரூ.120-க்கும், ரூ.2,000-க்கு விற்ற ஜாதி மல்லி ரூ.800-க்கும், ரூ.1800-க்கு விற்ற முல்லை ரூ.800-க்கும் விற்பனையானது.
இதேபோல் கிலோ ரூ.400 -க்கு விற்ற ரோஜாபூ ரூ.280-க்கும் விற்பனையானது. கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு நெருங்குவதால் இனி வரும் நாட்களில் பூக்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.