கரூரில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு


கரூரில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூரில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.

கரூர்

பூக்கள் விலை உயர்வு

கரூர் ரெயில் நிலையம் அருகே பூ மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பூக்களை மொத்தமாக கொண்டு வந்து, பூ மார்க்கெட்டில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக முகூர்த்த நாட்கள் என்பதாலும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படுவதாலும் நேற்று பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனை பொதுமக்கள், வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை ஏலத்தில் எடுத்து சென்றனர்.

மல்லி ரூ.2 ஆயிரம்

பூ மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட பூக்களின் விலை கிலோ அளவில் பின்வருமாறு:-

குண்டு மல்லி ரூ.2 ஆயிரத்திற்கும், முல்லை பூ ரூ.800 முதல் ரூ.ஆயிரம் வரையும், சம்பங்கி பூ ரூ.300-க்கும், அரளி பூ ரூ.150-க்கும், மாசி பச்சை பூ ரூ.20-க்கும், ரோஜா ரூ.150-க்கும், தாமரை ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நொய்யல்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் வாழைத்தார்கள் பறிக்கப்பட்டு தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கு விற்றது தற்போது ரூ.500-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300-க்கு விற்றது ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கு விற்றது ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கு விற்றது ரூ.450-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்றது ரூ.10-க்கும் விற்பனையானது.

இதேபோல் நொய்யல் பகுதியில் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், அரளி ரூ.250- க்கும், ரோஜா ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் விற்பனையானது.


Related Tags :
Next Story
  • chat