வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது
ஆடி மாத விஷேசம் மற்றும் வரத்து குறைவு காரணமாக திருப்பூரில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800-க்கு விற்பனையானது.
ஆடி மாத விஷேசம் மற்றும் வரத்து குறைவு காரணமாக திருப்பூரில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800-க்கு விற்பனையானது.
மல்லிகை ரூ.800
திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக அனைத்து வகை பூக்களின் விலையும் ஓரளவு குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஆடி மாத விசேஷங்கள் தொடங்கியுள்ளதாலும், ஆடி காற்று காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் திருப்பூரில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை நாளையொட்டியும், இன்று (சனிக்கிழமை) ஆடிப்பூரம் வருவதை யொட்டியும் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. சமீப காலமாக ஒரு கிலோ மல்லிகைப்பூ 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிலோ ரூ.600 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை மும்முரம்
இதேபோல் கிலோ ரூ.200 முதல் ரூ.280 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ தற்போது ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜாதிமல்லி ரூ.350 முதல் ரூ.400 வரைக்கும், அரளிப்பூ ரூ.200, சம்பங்கி ரூ.140, பட்டுப்பூ ரூ.80, செவ்வந்தி ரூ.280, ரோஜா பூ ரூ.100 முதல் ரூ.200 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. விலை அதிகமாக இருந்த போதும் பூக்களின் விற்பனை மும்முரமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.