தர்மபுரி மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு-குண்டுமல்லி கிலோ ரூ.1,800-க்கு விற்பனை


தர்மபுரி மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு-குண்டுமல்லி கிலோ ரூ.1,800-க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்தது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,800-க்கு விற்பனையானது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூக்கள் சாகுபடி

தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், நார்த்தம்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், அதகபாடி, கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கடகத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பூக்கள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, மற்றும் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் பெரும்பாலும் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து பெங்களூர், சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகரங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் பூக்கள் தவிர மற்ற பூக்கள் அனைத்தும் தர்மபுரி பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை முதல் மாலை வரை இந்த பூக்களை வாங்குவதற்கு ஏராளமான சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூ மார்க்கெட்டுக்கு வந்து செல்கிறார்கள்.

கிடுகிடு உயர்வு

இந்தநிலையில் தர்மபுரி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்தது. இதனால் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை அதிகரித்தே காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.1,200-க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று ரூ.1,800-க்கு விற்பனையானது. இதேபோன்று ரூ 1,000-க்கு விற்பனையான ஒரு கிலோ சன்னமல்லி நேற்று ரூ.1,500-க்கு விற்பனையானது.

இதேபோல்ரூ 1,000-க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் நேற்று ரூ.1200-க்கு விற்பனையானது. இதேபோன்று ரூ.350-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி ரூ.700-க்கும் விலைபோனது. மேலும், சம்பங்கி, செவ்வரளி, சாமந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் கடந்த நாட்களை விட அதிகரித்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வரத்து குறைவு

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்களில் விளைச்சல் சற்று குறைந்துள்ளது. இதனால் அனைத்து பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. மேலும் முகூர்த்த நாள் என்பதால் பூக்களில் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு சில நாட்கள் இருக்கும் என்றனர்.


Next Story