பொங்கல் பண்டிகையை முன்னிட்டுபூக்கள் விலை கடும் உயர்வுமல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டுபூக்கள் விலை கடும் உயர்வுமல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மல்லிகை கிலோ ரூ.2,500

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ஆண்டாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல் பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வாங்கி வரப்படுகின்றன. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நாமக்கல்லில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ அரளி பூ நேற்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற சம்பங்கி ரூ.100-க்கும், ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500-க்கும், முல்லை பூ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மல்லிகை, முல்லை பூக்கள் கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.3,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.160-க்கும், அரளி கிலோ ரூ.460-க்கும், ரோஜா கிலோ ரூ.350-க்கும், முல்லை பூ கிலோ ரூ.3,000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.160-க்கும், கனகாம்பரம் ரூ.2,500-க்கும், காக்கட்டான் ரூ.1,600-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வால் பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story