பொள்ளாச்சியில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகம்


பொள்ளாச்சியில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:45 PM GMT)

விஷூ பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விஷூ பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

விஷூ பண்டிகை

தமிழ் புத்தாண்டு இன்று (வெள்ளிக்கிழமை) சித்திரை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் சித்திரை முதல் நாள் விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விஷூ பண்டிகையையொட்டி வீட்டின் பூஜை அறையில் கிருஷ்ணர் படத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். அனைத்து வகையான பழங்கள், பூக்கள், தானிய வகைகள் வைத்து பூஜை செய்வார்கள்.

இதில் மஞ்சள் நிற கொன்றை பூக்கள் அதிகம் இடம்பெறும். ஒரு பெரிய கண்ணாடியும் வைக்கப்பட்டு இருக்கும். காலை எழுந்தவுடன், குடும்பத்தில் உள்ள அனைவரும் பூைஜ அறைக்கு வந்து கண்ணாடியை பார்ப்பார்கள். இது விஷூ கனி காணுதல் என்பார்கள். இந்த விஷூ பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் நேற்று பழங்கள், பூக்கள் விற்பனை சூடுபிடித்தது.

பழங்கள்

பொள்ளாச்சியில் நேற்று விற்பனையான பழங்கள் (ஒரு கிலோ) விலை விவரம் வருமாறு:-

ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180 வரை, ஆரஞ்சு ரூ.80 முதல் ரூ.120 வரை, கருப்பு திராட்சை ரூ.80, வெள்ளரி ரூ.40, மாதுளை ரூ.160 முதல் 180 வரை, பலாப்பழம் ரூ.50, மாம்பழம் ரூ.80 முதல் ரூ.160 வரை விற்பனை ஆனது.

விஷூ பண்டிகையையொட்டி பொள்ளாச்சி பழக்கடைகள், மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பழங்களை வாங்கி சென்றனர். விலை அதிகமாக இருந்தும் விற்பனை அதிகரித்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூக்கள் விற்பனை

பொள்ளாச்சி பூ மார்க்கெட் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இது தவிர திண்டுக்கல், நிலக்கோட்டை, சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விஷூ பண்டிகையொட்டி பூக்கள் விற்பனை அதிகரித்து இருந்தது. சுமார் 5 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

ஒரு கிலோ மல்லிகை ரூ.700 முதல் ரூ.1000 வரை, சம்பங்கி ரூ.180 முதல் ரூ.200 வரை, பட்டு ரூ.60 முதல் ரூ.70 வரை, செவ்வந்தி ரூ.250 முதல் ரூ.300 வரை, அரளி ரூ.450 முதல் ரூ.500 வரை, செண்டுமல்லி ரூ.70 முதல் ரூ.80 வரை, சில்லி ரோஜா ரூ.180, பன்னீர் ரோஜா ரூ.150-க்கு விற்பனை ஆனது. பூக்களை தரம் வாரியாக பிரித்து, அதற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து பூக்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்றனர். இதற்கிடையில் விஷூ பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை சற்று அதிகரித்து இருந்தது.


Next Story