பறக்கும் படை சோதனை; தேனியில் சிக்கிய 3 கிலோ தங்கம்- விசாரணையில் பரபரப்பு தகவல்


பறக்கும் படை சோதனை; தேனியில் சிக்கிய 3 கிலோ தங்கம்- விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 23 March 2024 10:04 AM GMT (Updated: 23 March 2024 10:34 AM GMT)

தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது தெரிய வந்தது.

தேனி,

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 25 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதன் மூலம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வத்தலகுண்டு அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வேனில் வந்த நபர்களிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர். விசாரணையில் மதுரையில் உள்ள 3 நகைக்கடைகளுக்கு அந்த நகைகளை கொண்டு செல்வதாக வேனில் வந்தவர்கள் கூறினர்.ஆனால் நகைகளை கொண்டு செல்வதற்கு உரிய அனுமதி பெறாமல் வேனில் நகைகளை கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் அந்த நகைகளை நிலக்கோட்டை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Next Story