குழித்துறை ரெயில் நிலையத்திற்கு நடைமேம்பாலம்


குழித்துறை ரெயில் நிலையத்திற்கு நடைமேம்பாலம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து குழித்துறை ரெயில் நிலையத்திற்கு பறக்கும் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து குழித்துறை ரெயில் நிலையத்திற்கு பறக்கும் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் (பொறுப்பு) சக்தி அனுபமா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கால்நடைத்துறை அதிகாரிகள் பேசுகையில்,"நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் அரசாணை பிறப்பிக்கப்பட்டதும் செயல்படுத்தப்படும். ஒரு யூனிட்டுக்கு 50 சதவீத மானியத்தில் 250 கோழிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். 4 வாரங்கள் ஆன கோழிகள் பொதுவாக இந்த திட்டத்தில் வினியோகம் செய்யப்படும்" என்றனர்.

அதிகாரிகள் புறக்கணிப்பு

பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் பேசுகையில், "தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் குமரி மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். அதேபோல் குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். எனவே ரெயில்வே துறை அதிகாரிகள் மீதும், கூட்டத்துக்கு தொடர்ந்து வராமல் இருக்கும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பறக்கும் நடைபாலம்

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரெயில்வே இருவழிப்பாதை விரிவாக்கத்தின் போது நிலம் கையகப்படுத்தும் போது அதிகபட்ச இழப்பீடு தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். தாம்பரம்- ஐதராபாத் சார்மினார் ரெயிலை மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களின் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து குழித்துறை ரெயில் நிலையத்துக்கு நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். திக்கணங்கோடு சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் 2 மதுபானக் கடைகளை அப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத்தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் ஜான்சிலின் விஜிலா, அம்பிளி, செலின்மேரி, லூயிஸ், நீலபெருமாள், பரமேஸ்வன், ராஜேஷ்பாபு, ஷர்மிளா ஏஞ்சல், ஜோபி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story