தஞ்சையில், நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம்


தஞ்சையில், நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம்
x

தஞ்சையில், நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம்

தஞ்சாவூர்

தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சையில் ரூ.1 கோடியில் நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

அருங்காட்சியகம்

தமிழகத்தில் ஏற்கனவே தனியார் சார்பில் சென்னை, கோவை, காரைக்குடி அருகே கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் வட்டார பாரம்பரிய புழங்கு பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தாலும், அரசு தரப்பில் இதுவரை அமைக்கப்படவில்லை.

இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் மூலம் தமிழ் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துவதற்காவும், மரபுக் கலைகளை மீட்டெடுப்பதற்காகவும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ரூ.1 கோடி ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறப் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதல் கட்டமாக ரூ.50 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும் இடையே உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை செயல்பட்டு வந்தது.

பண்பாட்டு வளாகம்

பின்னர் இந்த கட்டிடம் கேந்திரிய வித்யாலயா சார்பில் 2-வது பள்ளி தொடங்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக வழங்கப்பட்டது. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படாததால், இந்த கட்டிடத்தை தமிழ்ப்பல்கலைக்கழகம் மீண்டும் பெற்றது. இந்த இடம் தற்போது தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளைப் பயன்படுத்தி தமிழ்ப்பல்கலைக்கழக அருங்காட்சியகத்துடன் இணைந்து மானிடவியல், பழங்குடி மக்கள், நாட்டுப்புறவியல், மக்கள் பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய நாட்டுப்புறப் பண்பாட்டு அருங்காட்சியகம் தொடங்கப்பட உள்ளது.

ஏர்கலப்பை

இந்த வளாகத்தில் தரைத்தளம், முதல் தளம் கொண்ட பழைய கட்டிடமும், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய கட்டிடமும் என இரு பிரிவுகள் உள்ளன. இதில், ஒரு பகுதியில் தொல்லியல் அருங்காட்சியகமும், மற்றொரு பகுதியில் நாட்டுப்புறப்பண்பாட்டு அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளன. பராமரிப்பின்றி உள்ள இந்தக் கட்டிடத்தைப் புதுப்பித்து, அருங்காட்சியகத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட உள்ளது. காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக இருப்பதால், இந்த அருங்காட்சியகத்தில் ஏர் கலப்பை, ஏற்றம் இறைத்தல், விதைகளைப் பாதுகாக்கும் கருவிகள் உள்ளிட்ட பாரம்பரிய வேளாண் புழங்கு பொருட்கள் சேகரித்து காட்சிப்படுத்தப்பட உள்ளன.

கலைப்பொருட்கள்

இதேபோல, நாட்டுப்புற தெய்வங்கள், பழங்கால வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள், மீனவ வாழ்வியல் உள்ளிட்ட தொழில்கள் சார்ந்த பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை உள்ளிட்ட பாரம்பரிய கலைப்பொருள்கள், பிரம்பு, ஓலைகளால் செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள், நெசவு, மண்பாண்டங்கள் தொழிலுக்கு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், வேட்டையாடும் கருவிகள், தரை வழி, நீர் வழி, கடல் வழி போக்குவரத்து சாதனங்கள், மாட்டு வண்டி, கட்டை வண்டி, கூண்டு வண்டி, குதிரை வண்டி, பழங்கால பொழுதுபோக்கு விளையாட்டு பொருள்களான தாயம், பல்லாங்குழி, சமையல் பொருள்கள், நகைப் பெட்டிகள் போன்றவை இடம்பெற உள்ளன.

தஞ்சையில் ஏற்கனவே பெரியகோவில், அரண்மனை வளாகம், சிவகங்கை பூங்கா, மணிமண்டபம், பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகம், அறிவியல் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளதால் தஞ்சை மாநகரம் சுற்றுலா தலமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இப்போது நாட்டுப்புறப் பண்பாட்டு அருங்காட்சியகமும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story