43 அரங்குகளுடன் நாகர்கோவிலில் உணவு திருவிழா;அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்


43 அரங்குகளுடன் நாகர்கோவிலில் உணவு திருவிழா;அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
x

நாகர்கோவிலில், 43 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட உணவு திருவிழாவை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்,

நாகர்கோவிலில், 43 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட உணவு திருவிழாவை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

உணவு திருவிழா

குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 2 நாள் உணவு திருவிழா நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவு கட்டுப்பாட்டு துறை சார்பில் உணவின் தரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது, உணவில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிவது எப்படி? என்பது போன்ற விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பண்டைய கால உணவுகள் சத்து நிறைந்தது.

இயற்கை விவசாயம்

முன்பு இயற்கை விவசாயம் மூலம் ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தன. இயற்கை விவசாயத்தை நோக்கி நாம் திரும்பி கொண்டிருக்கிறோம். எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மிக பெரிய நன்மை ஆரோக்கியமான வாழ்வை அளிப்பது. அதற்கு முதலில் மண் வளத்தை காக்க வேண்டும். இயற்கையோடு என்றும் மனிதர்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும். வீட்டுத் தோட்டம் அமைத்து இயற்கை உணவுகளை அதிகம் தயாரித்து மக்கள் பயன்பெற வேண்டும். புற்றுநோய் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வளமான வாழ்வை மக்கள் பெற வேண்டும். நோயற்ற வாழ்வே மனிதனின் உண்மையான சொத்து. நமது மாவட்டத்தில் மிதமான தட்ப வெப்பநிலை சீராக இருந்து வருகிறது. வலுவான மற்றும் அமைதியான மாவட்டமாக குமரி திகழ நாம் அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு மனோ தங்கராஜ் கூறினார்.

கண்டனம்

அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவா் கூறியதாவது:-

உணவு திருவிழாவில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு உணவின் முக்கியத்துவம் பற்றி அறியவேண்டும். கேரளா அரசின் வளர்ச்சி பணிகளை அறிய தனி இணைய தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் கொண்டுவர ஆலோசிக்கப்படும். மத்திய அரசு உணவு பொருளான அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது கண்டனத்துக்குரியது. இதனை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். மணவாளக்குறிச்சி மண் ஆலையில் மண் எடுக்க அங்குள்ள மக்கள் மற்றும் மீனவர்களிடம் கருத்து கேட்கப்படும். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வராது.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

43 அரங்குகள் அமைப்பு

உணவு திருவிழாவில் 43 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான உணவு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதாவது கோவை மாவட்டத்தில் இருந்து பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்கள், கோவில்பட்டி கடலைமிட்டாய், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா உள்பட பல்வேறு மாவட்டங்களின் புகழ்பெற்ற உணவு பொருட்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

உணவு திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த சில உணவு பொருட்களை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் சுவைத்து பார்த்தனர். மேலும் உணவில் கலப்படம் உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது என்று உணவு பாதுகாப்பு பணியாளர்கள் விளக்கினார்கள்.

கலை நிகழ்ச்சி

முன்னதாக உணவு திருவிழா நடைபெறும் நுழைவாயிலில் காய்கறிகளால் மயில் உருவம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் தர்பூசணி பழத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முகத்தோற்றமும் வரையப்பட்டு இருந்தது.

மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்கில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. உணவுத் திருவிழாவில் பல்வேறு விதமான உணவுப் பொருட்களும் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் நடனம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இங்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து உணவுகளை சாப்பிட்டு, நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

உணவு திருவிழா 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், மாவட்ட உணவு பாதுகாப்பு உறுப்பினர் குமாரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story