மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு
குமாரபாளையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
குமாரபாளையம்:-
காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால் குமாரபாளையத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அங்கிருந்த மக்கள் பாதுகாப்பு கருதி குமாரபாளையத்தில் நடராஜா திருமண மண்டபம், புத்தர் தெரு பள்ளி கட்டிடம், சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குவேண்டிய உணவு, உடை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. தற்போது குமாரபாளையத்தில் 95 குடும்பங்களைச் சேர்ந்த 266 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உணவு வழங்கினார். அவருடன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நகர செயலாளர் செல்வம், துணை செயலாளர் ரவி, பொருளாளர் குட்லக் செல்வம், அன்பரசு, கவுன்சிலர்கள் ரங்கநாதன், சத்தியசீலன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நீர்வரத்து குறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது குமாரபாளையத்தில் காவிரி ஆற்றோரம் பாதுகாப்பான தடுப்புச் சுவர் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.